உன்னை எனக்கு ஒரு துளி கூட பிடிக்காது! ஆனால்…

*****************

உன்னை எனக்கு
ஒரு துளி கூட பிடிக்காது
உன்
உண்ணாவிரத
ஓரங்க நாடகத்திற்குப் பிறகு….

உன்னை எனக்கு
ஒட்டுமொத்தமாகப் பிடிக்காது
நீ
காமராசர் மீதெறிந்த
கழிசடைச் சொற்களுக்குப் பிறகு….

உன்னை எனக்கு
உண்மையிலேயே பிடிக்காது
தமிழ்
நாடு வளர்க்காமல்
உன்
வீடு வளர்த்த பிறகு….

உன்னை எனக்கு
ஒரு சொட்டு கூட பிடிக்காது
அரசு
கஜானாவைக் காலி செய்து
உன்
ஜிகினா நிரப்பிய பிறகு….

உன்னை எனக்கு
ஒரு பைசா கூட பிடிக்காது
நீ
ஊழலின் ஊற்றுக் கண்ணை
உலகிற்கே அறிமுகம் செய்த பிறகு….

ஆனாலும்
உன்னைப் பிடிக்கும்

ஏன் தெரியுமா
எங்கள் தலைமுறை வள்ளுவனே

உன் தமிழ்
உன் குரல்
உன் சமயோசிதம்
உன் நகைச்சுவை
உன் ஆற்றல்
உன் ஆளுமை
உன் நிர்வாகம்
உன் உழைப்பு
உன் விடாமுயற்சி
உன் போராட்ட குணம்
உன் தந்திரம்
உன் சாணக்கியம்
உன் நா வன்மை
உன் பிடிவாதம்
உன் தேடல்
இப்படி
இன்னும்
ஏராளங் கோடிகள்….

பட்டத்தரசன்
பாவலனாக இருந்ததை
புறநானூற்றில் படித்து
உன் கீற்றில்
உணர்ந்தவன் நான்….

இட ஒதுக்கீடு
சமூக நலன்
சமயச் சார்பற்ற நிலை
ஒடுக்கப்பட்டவருக்கான ஆதரவு
பெண்களுக்கான வானம்
மொழி மீதான காதல்
வடவன் உள் வராமல் காத்த அரண்
மாநிலச் சுயம்
தமிழுக்கான அங்கீகாரம்
ஏழைகளுக்கான திட்டம்
இப்படி
நீ செய்த செயல்
ஒன்றல்ல ரெண்டல்ல
ஒருபாடு எனில் தப்பல்ல….

” நீ சிறு பையன்
போ! படி”
என்ற
அண்ணாவையே
முந்தப் பார்த்தவன் நீ….

கட்சித் தலைவர் அவர்
கால்நடையாய் வரும் போதே
கார் வாங்கிய
கௌடில்யக் கம்பீரன் நீ….

ஆயினும்
அவரை
உலகம் முழுதும்
ஒலிபரப்பியவன் நீ…..

இரண்டாவது தேர்தலில்
அண்ணா உட்பட
எல்லோரும் தோற்ற போதும்
தொகுதி மாறி நின்று
தோள் துண்டு கலையாமல்
பூமாலைச் சுமந்தவன் நீ….

அண்ணா
ஆவி துறந்த
அரை இரவில்
வரலாறு மாற்றிய
வர ஆறு நீ….

கரகரக் குரலில்
கரு கரு காமராசரையே
கதறடித்தவன் நீ….

பொய்களைக் கூட
மெய்களாக்கும் வித்தை தெரிந்த
மேதமைக்காரன் நீ….

பல பேர்கள் வேரில்
நீரானவன் நீ
திராவகச்
சாறானவன் நீ…..

கொள்கை வேறு
கூட்டணி வேறு என்ற
புதிய ரசவாதம் கண்டுபிடித்த
பூர்ஷ்வா பரம்பரை நீ….

நாணயம்
உண்டோ இல்லையோ
நா நயத்தால்
நீதி மன்றங்களையே
நிர்மூலமாக்கியவன் நீ….

உன் ஒருவனையே
உட் கொள்ள முடியாத எங்களுக்கு
ம கோ ராமசந்திரனை
வளர்த்து விட்ட ஒன்று தான்
நீ செய்த பெருந் தவறு…..

அதன்பின்
நீ வளர்த்த பலபேர்
உன்னைக்
கொத்தியதும் உண்டு
நீ
குத்தியதும் உண்டு….

இலக்கணம் வரவில்லை எனினும்
இலக்கியம் செய்த
ஆச்சரிய அணி நீ….

உனக்குப் பின் வந்த
உனக்கு முன் வந்த
ஒவ்வொருவரையும்
மண்
மடித்துத் தாம்பூலம் போட்டு விட்டது….

ஆனால்
எமனுக்கே
லெமன் பிழிந்த
கவண் நீ….

உன்னிடம் கற்க
ஓராயிரம் உண்டு
உலகிற்கு

உன்போல ஞானஸ்தன்
இதன்முன் பிறந்ததற்கு
தகவல் இல்லை

இனிமேல் பிறப்பான் என்பது
சாத்தியமில்லை

நீ மட்டும்
காமராசர் போல
சுயநலமற்று இருந்திருந்தால்
தமிழ்நாடு
இன்னொரு ஜப்பானாய்
எழுந்து நின்றிருக்கும்

இப்போதும் குறைவில்லை
வட மாநிலம் விட
தமிழ் மாநிலம்
வளமாக்கி இருக்கிறாய் என்பது
வரலாற்று நிசம்

ஆனால்
அஃதுன்
திறமை முன் கடுகு

அதனால் தான்
இத்தனைப்
பன்னீர்ப் பொடுகு

நீ
காமராசர் விட புத்திசாலி
அண்ணா விட அறிவாளி

அதனால் தான்
மூலைக்கு முன்னூறு
கோவில் இருந்த ஊரில்
உன்
மூளையால்
நாத்திகப்
பேழையால்
ஐந்து முறை
ஆட்சி அமர்ந்தாய்

ஒரே விஷயத்தை
உருட்டிப் புரட்டி
ஊர் ஒப்ப வைக்க
உன்னிடம் தான் கற்க வேண்டும்

ராமச்சந்திரன்
சத்துணவு திட்டத்தை
“தட்டேந்தவோ பிள்ளைகள்” என
முட்டி மோதிய உன்னால்
முட்டை தந்து
முட்டுத்தர இயன்ற உன்
மூளைச் சாதுர்யம் யார்க்கு வரும்….

ஒன்றறிய வேண்டும் எங்கள்
ஒல்காப்புகழ்
தொல்காப்பியனே

அன்றைய நாடகக்காரன் நீ
ஆன்றவிந்த
விருதுநகர்க் காரனை
வீழ்த்திய பாவம்
ஒரு
சினிமாக்காரி முன்
உன்னைச்
சிதலமாக வைத்ததன்
காரணம் என்பது
நாங்கள்
கற்றுக் கொண்ட பாடம் கலைஞரே

என்றாலும்

உன்போலொருவன்
உருவாதல் அரிது
உன்னிலும் இல்லை
உலகென்ற பெரிது

நீ மட்டும்
லேசாக நிமிர்ந்தால் போதும்

மாநில
மத்திய ஆட்கள்
“டீக் கடை” யில்
ஆத்திக் கொண்டிருப்பர்
அன்றில்
அரற்றிக் கொண்டிருப்பர்….

உன் மீதெனக்கு
உட்கார முடியாத
உயர் கோபம் எது தெரியுமா
எங்கள்
கோபாலபுர பூபாளனே

கவியரசரை
களங்கப்படுத்துவதாய்க் கருதி
என்னறிவொத்த
வடுகபட்டிக்காரனை
கவிப்பேரரசென்றாய் பார்

அங்கே உணர்ந்தோம்

உன்
அடிநெஞ்சுக் கறையான்
அரித்த வன்மம்

பரவாயில்லை

எங்கள் சூரியனுக்கு
விட்டில் நீயா
விழா எடுப்பது

இப்படி
எத்தனையோ பிழை இருப்பினும்
கடத்தவார செய்திகள்
இனிப்பாக இல்லை தலைவரே

இதோ!

இதயம் உருக பிரார்த்திக்கிறேன்

நீ
இன்றல்ல
இன்னும் பல நூறாண்டு
வாழ்க வாழ்க என
தமிழை
ஆள்க ஆள்க என…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *