வாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’

மதுரை,மதுரை மாவட்டம் புல்லுச்சேரி கிராமத்தை சேர்ந்த பெண், சின்னப்பிள்ளை. களஞ்சியம் என்ற பெயரில் இயக்கம் நடத்திய இவர், மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். இதற்காக அவருக்கு 2001-ம் ஆண்டு மத்திய அரசின் “ஸ்ரீ ஸ்திரீ சக்தி” விருது கிடைத்தது. அப்போது அவருக்கு இந்த விருதினை வழங்கிய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளை காலில் விழுந்து தொட்டு கும்பிட்டார். இதைத்தொடர்ந்து சின்னப்பிள்ளை நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.இந்த நிலையில் வாஜ்பாய் மரணம் குறித்து, சின்னப்பிள்ளை கூறியதாவது:-மத்திய அரசின் விருதை நான் பெற்றபோது நாட்டுக்கே பிரதமரான அவர் எனது காலில் விழுந்ததை நினைக்கும் போது இப்போதும் எனது மனம் பதைபதைக்கிறது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மனமுடைந்து போய் விட்டேன். சிறந்த தலைவரை இழந்துவிட்டோம். அவரை போன்ற ஒரு தலைவர் இனி நாட்டுக்கு கிடைக்க போவதில்லை. அவர் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது.வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியறிந்து அவரை பார்க்க வேண்டும் என்று மனம் எண்ணியது. ஆனால் எனக்கும் உடல் நலம் சரியில்லாமல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*