தினகரனால் ஆபத்து வரும் என நினைத்தால், இவரால் வந்து நிற்கிறதே! அதிர்ச்சியில் இருக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்!

அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கே.சி. பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பரிசீலித்து நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் நடந்த கோஷ்டி பூசல்களால் ஓபிஎஸ் இபிஎஸ் அணி என்று தனித்தனியாக செயல்பட்டு வந்தன.

அப்போது நடைபெற இருந்த ஆர்கே நகர் இடைதேர்தலில் இரட்டை இலை சின்னத்தை இரண்டு தரப்பும் கேட்க, தேர்தல் ஆணையம் கட்சியையும், சின்னத்தையும் முடக்கி உத்தரவிட்டது.பின்பு ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக இணைய அதிமுக கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தினகரன் அணி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஓபிஎஸ் இபிஎஸ், அதிமுக கட்சி அமைப்பில் பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கியும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கியும் பொதுக்குழுவை நடத்தினார்கள்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை ஆதரித்து மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என அதிமுகவில் இருந்த கே சி பழனிச்சாமி அறிவித்தார் இதனை சற்றும் எதிர்பாராத ஓபிஎஸ் இபிஎஸ் அவரை உடனடியாக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். 

இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் க்கு எதிராக திரும்பிய பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பதவிகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அப்படியென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னைக் கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை.

அவர்கள் என்னை நீக்கியது செல்லாது என்று தடாலடியாக கூறி வந்தார். பின்னர் இதனை எதிர்த்து கேசி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இவர்கள் என்னை நீக்க முடியாது,  இவர்கள் வகிக்கும் பொறுப்பு கட்சியின் அமைப்பு பொறுப்புகளில் இல்லை மேலும் பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது எம்ஜிஆர் வகுத்த சட்ட திட்டங்களுக்கு எதிரானது அதனால் மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டுவந்து தேர்தல் நடத்தவும் ஓபிஎஸ் இபிஎஸ் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி உத்தரவிட வேண்டும் என கே சி பழனிச்சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதிமுகவின் கட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை மீண்டும் பரிசீலனை செய்து நான்கு வாரத்திற்குள் முடிவை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் இபிஎஸ் அவர்களின் பதவிகள் நீடிக்குமா அல்லது மீண்டும் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி வருமா என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து  தெரியவரும்.

தினகரன் ஒரு புறம் குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் கேசி பழனிசாமியால் பிரச்சனை ஏற்படும் என நினைத்திருக்க மாட்டார்கள். டெல்லியில் இருந்து என்ன பதில் வருமோ என்ற பரிதவிப்பில் தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *