ஏழை விவசாயி தற்கொலை! 10 லட்சம் நிவாரணத்தை போராடி பெற்றுகொடுத்த பாமகவினர்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருணாகரநல்லூரில், தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து சென்றதால் அவமானமடைந்த தமிழரசன் என்ற விவசாயி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  கருணாகரநல்லூரைச் சேர்ந்த விவசாயி தமிழரசன் தம்மிடம் இருந்த பழைய டிராக்டரை கடந்த ஆண்டு விற்பனை செய்துவிட்டு,  கோட்டக் மஹிந்திரா நிறுவனத்திடம் கடன்பெற்று புதிய டிராக்டரை வாங்கி உள்ளார். இதற்காக வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டியை தலா ரூ.90 ஆயிரம் வீதம் 8 சம தவணைகளில் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன்படி முதல் இரு தவணைகளை சரியாக செலுத்தி விட்ட தமிழரசன், கடந்த மாதம் செலுத்த வேண்டிய ரூ.90,000 தவணையில்  ரூ.50 ஆயிரத்தை மட்டும் செலுத்தி விட்டு கரும்புக்கான கொள்முதல் விலை கிடைத்ததும் கட்டுவதாகக் கூறி கால அவகாசம் பெற்றிருக்கிறார். ஆனால், 10 நாட்களில் கடன் தவணையை செலுத்தா விட்டால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கை அனுப்பிய நிதி நிறுவனம், அதன்படியே அடியாட்களை அனுப்பி டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது. இதனால் அவமானம் அடைந்த உழவர் தமிழரசன் தமது விவசாய நிலத்தில் கத்தரிச் செடிக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை  குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எந்தத் தவறும் செய்யாத உழவர் தமிழரசனை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது நிதி நிறுவனத்தின் சட்ட விரோத செயல்கள் தான் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டங்கள் வெடித்தது. கடலூர் தெற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் தீவிரமாக போராட்டம் செய்தார்கள். இதனை கண்டித்து பாமக நிறுவனர் இறந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை வழங்க கோரி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதனை தொடர்ந்து பாமகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இழப்பீடு  கேட்டு கடுமையாக போராடியதன் காரணமாக  மகேந்திரா கம்பெனி ரூபாய் 10,00,000   தர ஒப்பு கொண்டது .மேலும் பறிமுதல் செய்த வண்டியை ஒப்படைத்தது உடனடி செலவு தொகையாக 50000,ஆயிரம் கொடுத்தது. அதன் அடிப்படையில் இன்று சிதம்பரம் உதவி ஆட்சியாளா் ரூபாய் 10,லட்சம் காசோலையை பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி தமிழரசன் மனைவி வளா்மதியிடம் வழங்கினார்கள். 


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *