18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு!

முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கின் மீதான விசாரணை  சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய குழு முன்பு விசாரணைக்கு வந்தது, முதல்வர் தரப்பில் இருந்து வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார்.அப்போது, முதல்-அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் 18 பேரும் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதன்மூலம் சட்டசபையில் முதல்-அமைச்சருக்கு பெரும்பான்மை உள்ளதா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கவர்னரை 18 பேரும் தள்ளியுள்ளனர்.இதன்மூலம், அந்த 18 பேரும் கட்சி உறுப்பினர் பதவியை தானாகவே விட்டுக் கொடுத்துவிட்டதாகவே கருத முடியும். அதனால் தான் அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல முதலமைச்சரை மாற்றுவது குறித்து கவர்னர் முடிவெடுக்க முடியாது.18 பேரும் எந்த நோக்கத்திற்காக கடிதம் கொடுத்தனரோ, அதே நோக்கத்தை கருத்தில் கொண்டு தான் தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தனது வாதத்தை முன்வைத்தார்.  இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் இருந்து வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அதில், ”சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், சபாநாயகர் அழைத்ததும் தனது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்ததால் ஜக்கையன் மீது நடவடிக்கை இல்லை என்றும் தனது வாதத்தை முடித்துள்ளார். 

இந்த வழக்கில் அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு பெற்றது. இதனையடுத்து, இந்த வழக்கை இன்று இறுதி விசாரணை  வருகிறது.  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் பி.எஸ்.ராமன் இன்று இறுதி கட்ட வாதம் செய்கிறார். இன்றுடன் இறுதி கட்ட விசாரணை முடிவடைகிறது.இதை தொடர்ந்து இந்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றால் விரைவில் தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம். செல்லாது என உத்தரவிட்டால் ஆட்சி களையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் உருவாகும் நிலை உள்ளது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*