தத்தளிக்கும் கேரள மக்களுக்காக சிறுமி செய்த உதவி!. நெகிழ்ச்சி சம்பவம்!.

கேரளாவில் கடந்த 100  ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது.  எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் பேய்  மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை 350 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் நெகிழ்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன. விழுப்புரம் சிறுமி, சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியது, புதுச்சேரி மாணவர் தனக்கு காதுகேட்காத நிலையில், காதுகேட்கும் கருவி வாங்க வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.தற்போது, மதுரையைச் சேர்ந்த விக்ரமன் என்பவருடைய மகள் ஹெப்ரான் ஜோன்னா என்ற ஐந்தாவது படிக்கும் சிறுமி, தன்னுடைய உயர் படிப்புக்காக சேமித்துவைத்திருந்த 52 ஆயிரம் ரூபாயை கேரளா வெள்ள நிவாரணத்துக்காக வழங்கியிருக்கிறார்.இந்த சிறுமியின் குடும்பத்தினர், கேரளா வெள்ள நிவாரணத்துக்குப் பல உதவிகளையும் செய்திருக்கிறார்கள். இதனால் அந்த சிறுமி தானும் உதவி செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து, சேமித்த மொத்த பணத்தையும் வழங்கியிருக்கிறார். ஐந்தாவது படிக்கும் சிறுமி தமது உயர் படிப்புக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தை கேர வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *