சென்னை புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்படும் கருணாஸ்

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருணாஸ், இன்று இரவுக்குள் வேலூர் சிறைக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசினார்.

இதை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கருணாஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, சென்னை காவல்துறை கருணாஸை வேலூர் சிறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று இரவுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு கருணாஸுக்கு தரப்பு வழக்கறிஞர் ராஜா அவருக்கு பிணை கோரி மனு அளிக்கவுள்ளார். கொலை முயற்சி என்ற பிரிவு இந்த வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் கருணாஸுக்கு பிணை பெறுவதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *