வாய்ஸ் டெஸ்ட்க்கு ரெடியா? ஹெச். ராஜாவுக்கு சவால்!

நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகப் பேசிய வீடியோவில் இருப்பது தன் குரல் அல்ல என்று கூடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குரல் சோதனைக்குத் தயாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றிருக்கிறது. இந்த ஊர்வலம் செல்ல இருந்த பகுதியில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அப்பகுதி போலீசார் ஊர்வலத்தைத் தடுத்துள்ளனர்.

ஊர்வலத்தைத் தடுத்த போலீசாரை எதிர்த்து ஹெச்.ராஜா கடுமையான வாக்குவாதம் செய்தார். போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சைக்கு வித்திட்டது. வாக்குவாதத்திற்குப் பின் நீதிமன்றத்தின் தடையையும் மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள ஹெச்.ராஜா, “அந்த வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை. யாரோ என்னை போல பேசி இருக்கிறார்கள். நான் அதை பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார். காவல், நீதித்துறைகளை மிரட்டும் தொனியில் நான் பேசவில்லை. நான் பேசியது போல வெளிவந்துள்ள வீடியோ எடிட் செய்யப்பட்டது. யாரோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். எனக்கு எதிராக செயல்படும் சிலர் திட்டமிட்டு செய்த செயல் இது எனவும் கூறியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்கப்பட்டபோது, “ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி தமிழக அரசு சட்ட வல்லுநர்களின் கருத்து கேட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது போலீசாரை அவதூறாக பேசியது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜா பேசுவது போன்ற வீடியோவை முன்வைத்து ஏராளமான விமர்சனங்கள் குவிகின்றன.

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டுவிட்டு எதிர்ப்பு வலுக்கும் போது அதனை டெலிட் செய்வதும் அது தன்னுடைய கருத்து இல்லை ட்விட்டர் அட்மின் கருத்து என்று சொல்லி தப்புவது ஹெச்.ராஜாவின் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதே பார்முலாவில் அந்த வீடியோவில் என்னுடைய குரல் இல்லை யாரோ எடிட் செய்துவிட்டார்கள் என ராஜா பல்டி அடிக்கிறார் எனவும் நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். வீடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்றால், அதனை நிரூபிக்க குரல் சோதனைக்குத் தயாரா எனவும் நெட்டிசன்கள் சவால் விடுக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *