வைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு

தன் வாழ்க்கையில் பார்த்தவர்களுள் வைரமுத்து மிகவும் கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

Me Too பரப்புரை மூலம், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல திரைத்துறைகளில் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் பல பிரபலங்கள் சிக்கி வரும் நிலையில், 7 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவின் மீதும் #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

தனக்கு 18 வயது இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதேபோல், பின்னனி பாடகி சின்மயியும் வைரமுத்து மீது me too மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா அரங்கிலும், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, “நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களுள் வைரமுத்து மிகவும் கண்ணியமானவர்” என தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த நேர்காணல் நாளை ஒளிப்பரப்பாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *