கட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்

‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடங்குவதற்கான 90% பணிகள் முடிவடைந்துவிட்டதாக பேட்டியளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில், ரஜினியுடன் விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து, ‘பேட்ட’ படத்தில் ரஜினியின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து வாரணாசியில் இருந்து திரும்பி வந்த நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. படக்குழுவினரின் கடின உழைப்பு காரணமாக திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கட்சித் தொடங்குவதற்கான 90% பணிகள் முடிந்துவிட்டது. இருந்தாலும், அதற்கான காலம், நேரம் வர வேண்டும். எல்லோரும் கூறுவது போல் டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி அறிவிப்பு கிடையாது,” என தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் சபரிமலை தீர்ப்பு மற்றும் MeToo பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். அதேசமயம், காலகாலமாக கோவில்களில் இருக்கும் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும். #MeToo என்பது பெண்களுக்கு சாதகமான ஒரு இயக்கம். அதைப் பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. வைரமுத்து மீது சின்மயி புகார் கூறியிருந்தாலும், அதை வைரமுத்து மறுத்துள்ளார். மேலும், அவரிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்,” என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *