நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் தவறில்லை: டிடிவி தினகரன்

பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் தவறில்லை எனவும், அதை வரவேற்பதாகவும் அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான வழியில் நடக்க வற்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிர்மலாதேவி, தனக்கு ஆளுநரைத் தெரியும் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுதொடர்பாக பத்திரிக்கை ஆசிரியரான நக்கீரன் கோபால், ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து, ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை, தனிப்படை காவல்துறையினர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124இன் கீழ் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததுஉள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன், “நக்கீரன் கோபாலை கைது செய்ததில் தவறில்லை. ஆதாரம் எதுவுமில்லாமல் தனிநபர் பற்றி அவதூறாக செய்தி வெளியிடுவது தவறு. கடந்த 2009 ஆம் ஆண்டு என்னைப் பற்றியும், அவதூறாக செய்தி வெளியிட்டார். அதற்கு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை பெற்றுத்தந்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தவிர, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், காலையில் நடைப் பயிற்சி செய்யும்போது சந்தித்தார்,” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *