சர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு திரைக்கு வருவதற்கு முன்பாகவே, கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் நீதிமன்றம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது.

இதையடுத்து திரைக்கு வந்த ’சர்கார்’ படம், மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. படத்தின் கதையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்கும் வகையிலும், பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக புகார் வந்தன. இதனால் ஆளும் அதிமுகவினர் ’சர்கார்’ திரையிட்ட திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் விஜய் பேனர்களை கிழித்தும், போஸ்டர்களை எரித்தும் கண்டனம் தெரிவித்தனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, மதுரை, கோவையில் நேற்று மதியம் மற்றும் மாலைக் காட்சிகளை அதிமுகவினர் தடுத்து நிறுத்தினர்.

அதிமுகவினர் போராட்டத்தால் தஞ்சை ஜூபிடர், சாந்தி, கமலா ஆகிய தியேட்டர்களில் சர்கார் படத்தின் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒப்புக் கொண்டது.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு ‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க எடிட்டிங் பணிகள் தொடங்கின. இதன் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று, மறுதணிக்கை செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று மதியம் அல்லது மாலையில் ’சர்கார்’ படத்தை திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சர்ச்சை காட்சிகள் இடம்பெறாது.

சர்காரில் நீக்கப்பட்ட காட்சிகள்:

#இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் 5 நொடி காட்சி.

#வரலட்சுமியின் வில்லி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதன் ஆடியோ கட் செய்யப்பட்டுள்ளது. கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர்

#கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை ம்யூட் செய்யப்பட்டு உள்ளது


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *