ஜெயலலிதா சிலைக்கு 4 முலம் வேட்டி: பிஜேபியின் ஆலோசனையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அவமரியாதை

சென்னை: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு முன் அந்த சிலையை 4 முலம் வேட்டி போட்டு மூடி வைத்திருந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உயிரிழந்ததால் அவருக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் உருவ அமைப்பு ஜெயலலிதா போல் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து அவருக்கு புதிதாக சிலை அமைக்கும் பணிகள் தொடங்கின.

அதன்படி ஆந்திராவில் ஜெயலலிதாவிற்கான புதிய சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சிலையை திறக்கும் முன் அந்த சிலை 4 முலம் வேட்டியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்திருந்த தலைவர், தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமை என கட்சியினரால் போற்றப்படும் ஜெயலலிதா சிலையை வேட்டியை போட்டு மூடி வைப்பதா? என அதிமுகவினர் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

மேலும், ஈபிஎஸ்ஸூம், ஓபிஎஸ்ஸூம் ஜெயலலிதாவை மறந்து நாட்கள் ஆகிவிட்டன. அவர்கள் பேருக்காக ஜெயலலிதா பேரை உபயோகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் ஜெயலலிதாவை இதற்கு மேலும் அவமானப்படுத்த முடியாது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஜெயலலிதாவிற்கு ஈபிஎஸ்ஸூம், ஓபிஎஸ்ஸூம் கொடுக்கும் மதிப்பின் அளவு இவ்வளவுதான், அவர்களிடம் இருந்து கட்சியை கைப்பற்றும் காலம் தொலைவில் இல்லை என அமமுகவினரும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *