கட்சிகளை கிழி கிழி என்று கிழித்த சர்கார்! சர்கார் திரை விமர்சனம்

 

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டுவிட்டரில் நேர்மறையான விமர்சனத்தை கொடுத்து வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சர்கார் சண்டைக் காட்சிகள், வசனம் எல்லாமே மாஸ் தான் என்று பலரும் கூறியுள்ளனர்.

 

Sarkar Public Review: திரையரங்கில் சரவெடியாக வெடிக்கும் சர்கார்: மாஸ் காட்டும் அரசியல் வசனங்கள்!

Sarkar: காலை 4.30 மணிக்கு தொடங்கிய சர்கார் தீபாவளி: ஒரு விரல் புரட்சிக்கு தயாரான ரசிகர்கள்!

Sarkar Review: சர்கார் மினி விமர்சனம்

Sarkar First Review: சர்கார் விமர்சனம்!! மினி விமர்சனம்

 

 

Direction: A. R. Murugadoss
Production: Sun Pictures
Cast: Vijay, Keerthy Suresh, Varalaxmi Sarathkumar,Yogi Babu, Radha Ravi
Music: A. R. Rahman
Cinematography: Girish Gangadharan
Editor: Sreekar Prasad

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு 3வது முறையாக இணைந்திருக்கிறது விஜய் & ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. ‘தளபதி தீபாவளி’யாக அமைந்திருக்கிறதா சர்கார்?

கதைக்களம்

எந்த நாட்டிற்குச் சென்றாலும், அந்த நாட்டின் முக்கிய கார்ப்பொரேட் கம்பெனிகளை தன் வியூகத்தால் வீழ்த்தும் ‘கார்ப்பொரேட் மான்ஸ்டர்’ சுந்தர் ராமசாமி (விஜய்), தேர்தல் நாளில் தன் வாக்கை பதிவு செய்வதற்காக சென்னை வருகிறார். ஆனால், அவருக்கு முன்பே அவருடைய ஓட்டை கள்ள ஓட்டாக யாரோ போட்டுவிட்டுச் செல்வதால் அதிர்ச்சிகுள்ளாகிறார் சுந்தர் ராமசாமி. அதன் பிறகு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழக அரசியலையே புரட்டிப் போடுகிறது. சுந்தர் ராமசாமி அப்படி என்னதான் செய்தார்? அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன? இதுதான் சர்கார்.

படம் பற்றிய அலசல்

‘கத்தி’யில் விவசாயப் பிரச்சனையை கையிலெடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், இந்தமுறை அரசியலில் நிகழ வேண்டிய மாற்றங்களை முன்னிறுத்தி படம் எடுத்திருக்கிறார். கள்ள ஓட்டு என்ற ஒற்றைப் பிரச்சனையின் பின்னால் நிகழும் பிரம்மாண்ட விளைவுகளை தன் திரைக்கதை மூலம் ரசிகர்களுக்குப் புரிய வைக்க முயன்றிருக்கிறார். விஜய்யின் இன்றைய நட்சத்திர அந்தஸ்தும், அவரின் அரசியல் பிரவேக எதிர்பார்ப்பும் இந்தக்கதைக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. ஆனால், விஜய் படம் என்றாலே பொதுவாக எதிர்பார்ப்படும் முக்கிய அம்சங்களான சென்டிமென்ட், ரொமான்ஸ், ஹியூமர் விஷயங்கள் ‘சர்கார்’ படத்தில் பெரிய அளவில் எடுபடவில்லை. முழுக்க முழுக்க அரசியல் வசனங்களையும், சண்டைக்காட்சிகளையும் நம்பியே மொத்த படமும் நகர்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிம்டாங்காரன், ஓஎம்ஜி பொண்ணு பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. ‘டாப் டக்கரு’ பாடலை முக்கிய காட்சிகளுக்குப் பின்னணி இசையாக பயன்படுத்தியிருப்பது கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. க்ரிஷ் காங்காதரனின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

விஜய்யின் இளமை நாளுக்கு நாள் ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே இருப்பதுபோல் அத்தனை ஃப்ரஷ்ஷாகவும், துடிப்புடனும் இருக்கிறார். குறிப்பாக பாடல்களில் அவரின் நடன அசைவுகளும், சண்டைக்காட்சிகளில் அவரின் உழைப்பும் இன்றைய இளம் ஹீரோக்களையே ஆச்சரியப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது. இதையெல்லாம் தாண்டி நடிப்பிலும் அசத்தியிருக்கிறார் விஜய். சர்வநிச்சயமாக ‘சர்கார்’ படத்தின் மிகப்பெரிய தூண் விஜய் மட்டுமே. இப்படத்தின் கதைக்கு கதாநாயகிக்கான ஸ்கோப் கண்டிப்பாக இல்லை. அதையும் தாண்டி, ஹீரோயின் வேல்யூவுக்காக கீர்த்தி சுரேஷ் சேர்க்கப்பட்டிருப்பதால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘வீக்’காக அமைந்துள்ளன. இன்னொரு நாயகி வரலட்சுமி சரத்குமார் கடைசி அரை மணி நேரம் மட்டுமே வந்தாலும், ‘பவர்ஃபுல்’ ரோலில் கலக்கியிருக்கிறார். நிஜ அரசியல்வாதி பழ.கருப்பையா, இப்படத்திலும் அரசியல்வாதியாகவே தோன்றியிருக்கிறார். ராதாரவி வழக்கம்போல் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். காமெடியன் யோகி பாபு வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

பலம்
1. விஜய்
2. வசனங்கள்
3. சண்டைக்காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு

பலவீனம்

1. திரைக்கதை
2. கதாநாயகி
3. ஃபேமிலி ஆடியன்ஸுக்கான விஷயங்கள் குறைவாக இருப்பது

மொத்தத்தில்…

முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே ‘சர்கார்’ படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ். ஆனால், அவரின் முந்தைய விஜய் படங்களில் இருந்த மற்ற என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் இப்படத்திலும் இருந்திருந்தால் முழுமையான தீபாவளி கொண்டாட்ட படமாக அமைந்திருக்கும் இந்த சர்கார்.

ஒரு வரி பஞ்ச் : ‘சர்கார்’ மொத்தத்திலும் விஜய்யே வியாபித்திருக்கிறார்!

ரேட்டிங் : 5/10

#Sarkar #sarkarmoviereview #Vijay #KeerthySuresh #VaralaxmiSarathkumar #YogiBabu #RadhaRavi #ARMurugadoss #ARM #ARRahman #ARR #SunPictures

 


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *