அது நாங்கள் இல்லை – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிதாக ரிலீசாகும் படங்களை சூட்டுடன் சூட்டாக இணையதளங்களில் வெளியிட்டு தமிழ் திரையுலகுக்கு பெரிய அச்சுறுத்தலை அளித்து வரும் வலைதளம் தமிழ்ராக்கர்ஸ். பலரது உழைப்பை சுரண்டு பேர்வழி என தமிழ்ராக்கர்ஸை தமிழ் திரையுலகினர் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் சர்கார் திரைப்படம் ஹெச்.டி தரத்தில் இணையதளங்களில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கஸ் ட்விட்டரில் பதிவிட்டது போன்ற போஸ்ட் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதனால் சர்கார் பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த பதற்றத்துக்கு ஆளாகினர்.

அதை தொடர்ந்து ரஜினி நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் ‘2.0’ திரைப்படம் இணையதளங்களில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் தெரிவித்திருந்தது போன்ற பதிவு வெளியாகி அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, இது போல சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள சின்ன பாக்ஸில் இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், ‘ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. எங்கள் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால் அது போலியே. அது போன்ற ஐடிக்களை, அவர்கள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *