நடிகைகளைப் பார்க்க நேரமுண்டு; தமிழக மக்களைப் பார்க்க நேரமில்லையா; வைகோ ஆதங்கம்!

கஜா புயல் பாதிப்புக்காக மாநில அரசு கேட்டுள்ள நிதியில் 5% கூட மத்திய அரசு கொடுக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை கஜா புயல் ஏற்படுத்தி விட்டது.

இதில் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் பலியாகின. லட்சக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. கடந்த முறை வர்தா புயல் தாக்கிய போது, அதற்கான இழப்பை சரிசெய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணம் கேட்டது.

அதில் வெறும் 5% மட்டுமே வழங்கப்பட்டது. இம்முறை கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு ரூ.15,000 கோடி கேட்டுள்ளது. இதில் வெறும் 4% மட்டுமே மத்திய அரசு வழங்கும். நடிகைகளை பார்க்க நேரம் இருக்கிறது. ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் தமிழக மக்களைப் பார்க்க நேரமில்லயா?

உலகில் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இன்னும் சில நாடுகள் தான் இருக்கின்றன. அவற்றையும் தனது பதவிக் காலத்தில் பார்த்து விடட்டும். கேரளா மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது அங்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.

ஆனால் தமிழகத்தில் புயல் பாதித்த இடங்களைப் பார்க்க வரவில்லை. அடுத்த முறை மோடி பிரதமராக முடியாது. இதுவே கடைசி வாய்ப்பு. வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மதிமுக ஆய்வு நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *