இரவோடு இரவாக எடப்பாடியிடம் சரண்டர் ஆன விஜய்!

சர்கார் விவகாரத்தில் ஒரே நாளில் நடிகர் விஜய் அ.தி.மு.கவிடம் சரண்டரானது அவரது ரசிகர்களையே அதிர வைத்துள்ளது.

தமிழக அரசியல் நிலவரத்தை மிக கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சர்கார். அதிலும் அ.தி.மு.க அரசின் நலத்திட்டங்களை மிகவும் வன்மமான வசனங்களால் நடிகர் விஜய் கிழித்து தொங்கவிடும் வகையில் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. போதாக்குறைக்கு ஜெயலலிதாவின் இயற் பெயரான கோமளவல்லியை வில்லியாக நடித்துள்ள வரலட்சுமிக்கு இயக்குனர் வைத்துள்ளார்.

வழக்கமாக இந்த தகவல்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே மோப்பம் பிடித்து படத்தை வெளியே விடாமல் செய்வது தான் அ.தி.மு.கவின் ஸ்டைல். நடிகர் கமலின் விஸ்வரூபம், விஜயின் தலைவா படங்களுக்கு இந்த கதி தான் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை புதிய டெக்னிக்கை கையாண்டது அ.தி.மு.க. படத்தை ரிலீஸ் செய்வதில் எந்த சிக்கலுக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டது.

ஆனால் படம் வெளியான பிறகு திரையரங்குகளில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதை நடிகர்விஜய் மட்டும் அல்ல சன் பிக்சர்சும் கூட எதிர்பார்க்கவில்லை. படம் வெளியாவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள் மட்டுமே படத்தை வாங்க தயங்கும் நிலை ஏற்படும். ஆனால் படம் வெளியான பிறகு திரையரங்குகளில் ரகளையில் ஈடுபடும் பட்சத்தில் ரசிகர்கள் திரையரங்கிற்கு வர தயங்குவார்கள் என்பது தான் அ.தி.மு.கவின் திட்டம்.

இதனை செயல்படுத்தவே மதுரை, கோவை, சென்னை என்று ஒரு சில ஊர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அங்குள்ள திரையரங்குகளில் ரகளையில் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர் அ.தி.மு.கவினர். இதனால் மதுரையில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சியை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. சென்னையில் காசி மற்றும் உட்லன்ட்ஸ் திரையரங்குகளில் விஜய் பேனர் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து சர்கார் படத்தை திரையிடுவதா? வேண்டாமா? என்கிற குழப்பம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்டது.

இதனால் பயந்து போன சன் பிக்சர்ஸ் திரையரங்குகள் சர்காரை வெளியிட மறுத்துவிட்டால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கலங்கிப்போனது. உடனடியாக அ.தி.மு.கவிற்கு எதிரான காட்சிகளை நீக்கிவிட்டால் பிரச்சனை இல்லை என்ற விஜய் தரப்புக்கு சன் பிக்சர்ஸ் தகவல் கொடுத்துள்ளது. விஜயும் அ.தி.மு.வினரின் போராட்டத்தை பார்த்து சிறிது பதற்றத்தில் இருந்துள்ளார்.

இதனால் தான் வேறு வழியே இல்லாமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சன் பிக்சர்சிடம் விஜய் ஒப்புக் கொண்டார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவித்துவிட்டது. ஆனாலும் கூட காட்சிகள் நீக்கப்படும் வரை அ.தி.மு.கவினர் அமைதி காப்பது கடினம் தான் என்கிறார்கள். சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி என்று புரட்சி எல்லாம் பேசிவிட்டு ஒரே நாளில் அ.தி.மு.கவிடம் விஜய் சரண்டரானது அவரது ரசிகர்களையும் அதிர வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *