தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பசியில்லா இந்தியா: காமன்வெல்த் அமைப்பின் விருதை வென்று தமிழக இளைஞர் சாதனை

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

ஆசிய பிராந்தியத்துக்கான சிறந்த இளைஞர் விருதை பெற்ற தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் 2019ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் அமைப்பின் ஆசிய பிராந்தியத்துக்கான சிறந்த இளைஞர் விருதை தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர் வென்று சாதனை படைத்துள்ளார்.ஆசியா, பசிபிக், கரீபியன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 15-29 வயதிற்குட்பட்ட இளைஞர்களில், பிராந்தியத்தில் தலா ஒருவருக்கு ஆண்டுதோறும் சிறந்த இளைஞர் விருதினை காமன்வெல்த் அமைப்பு வழங்கி வருகிறது.அதாவது, தத்தமது நாடுகளில் வறுமை, பாலின சமத்துவம், தூய நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்வற்றில் நீடித்து நிலைக்கும் வளர்ச்சி இலக்குகளை கொண்டு செயல்பட்டு, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'நோ ஃபுட் வேஸ்ட' என்னும் தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனரான பத்மநாபன் கோபாலனுக்கு, ஆசிய பிராந்தியத்தில் இந்தாண்டுக்கான சிறந்த இளைஞர் விருது நேற்று (புதன்கிழமை) லண்டனிலுள்ள காமன்வெல்த் அமைப்பின் தலைமையகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இவரது வயது 25. என்ன செய்கிறார் பத்மநாபன்?தமிழகத்தின் 16 நகரங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர விழாக்களில் சமைத்து மீதமாகும் உணவைப் பெற்று, பசியால் வாடும் ஏழை மக்களுக்கு விநியோகிக்கிறது இவருடைய அமைப்பு. இந்த அமைப்பைத் தொடங்கியதற்கான காரணம் பற்றிக் கேட்டபோது, "நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சேலம். பிறகு பொறியியல் படிப்பதற்காக கோயம்புத்தூர் வந்தேன். கல்லூரி படிக்கும்போதே, அருகிலுள்ள பள்ளிகளுக்கு சென்று அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை சொல்லிக்கொடுத்து வந்தேன். அந்நிலையில், வழக்கம்போல் பள்ளி ஒன்றுக்கு சென்றபோது, மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் உணவுப் பொருட்களை சர்வசாதாரணமாக வீணாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அடுத்த முறையிலிருந்து கல்வியை தவிர்த்து உணவு பொருட்களை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்த தொடங்கினேன்"என்று கூறினார் பத்மநாபன்."உணவு பொருள் வீணாக்குவது குறித்த விழிப்புணர்வை உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு புரிய வைப்பதே சிரமமாக இருந்த நிலையில், தங்களது பள்ளிக்கு வருமாறு ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னை அழைத்தார். சற்று தயக்கத்துடனே ஒப்புக்கொண்டு, மாணவர்களுக்கு புரியும் வகையில் வரைபடங்கள் மூலம் பல்வேறு விஷயங்களை விளக்கினேன். இறுதியில் 6-7 வயதிருக்கும் சிறுமி ஒருவர் என்னிடம் வந்து, 'அம்மா வீட்டிலும், எங்கையாவது வெளியே செல்லும்போதும் எனக்கென்று தனியே பெரிய வாழை இலையில் சாப்பிட வைக்கிறார். அப்படி, நான் வீணாக்கும் உணவை எங்கு சென்று கொடுப்பது?' என்று கேட்டது என்னுள் பெரும் யோசனையை ஏற்படுத்தியது.""அதற்கு மறுநாளே என்னுடைய அலைபேசி எண்ணை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில், 'உங்களிடம் வீணாகும் பொருட்களை என்னிடம் கொடுங்கள். அதை பசியால் வாடுபவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன்' என்று பதிவிட்டவுடன், திருமணம் ஒன்றில் மீதமான உணவுப்பொருட்கள் உள்ளதாக அழைப்பு வந்தது. கையில் கட்டை பையை எடுத்துக்கொண்டு, உணவை வாங்கி அருகிலுள்ள மருத்துவமனையில் பசியால் வாடுபவர்களுக்கு கொடுத்தேன். இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், பேருந்தில் சென்று உணவை வாங்கி, தாளில் மடித்து, மருத்துவமனையில் கொடுப்பதற்கு எனக்கு 12 ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால், நான் கொண்டு சென்ற உணவால் 52 பேரின் பசி தீர்ந்தது" என்று தனது தொடக்ககால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் பத்மநாபன்.மேற்கண்ட நிகழ்வுகள் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக கூறும் பத்மநாபன், அதற்கடுத்த ஆண்டே மீதமான உணவை அளிப்பவர்களையும், பசியால் வாடுபவர்களையும் இணைக்கும் திறன்பேசி செயலியை வெளியிட்டதாகவும், அதை தற்போது மதுரை நீங்கலாக தமிழகத்தின் மற்ற அனைத்து மாநகரங்களையும் சேர்ந்த 12,000 மேற்பட்டோர் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார். "எங்களது திறன்பேசி செயலியை பயன்படுத்தி உணவு அளிக்க விரும்புபவர்கள், தங்களுக்கு அருகில் எந்த இடத்தில் பசியால் வாடுபவர்கள் உள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் 'ஜியோ டேகிங்கை' பயன்படுத்தி இடங்களை குறித்து வைத்துள்ளோம். எனவே, எங்களை தொடர்பு கொள்ளாமல், நேரடியாக உணவு தேவைப்படுபவர்களை அடைய அது உதவும்" என்று அவர் மேலும் கூறுகிறார்."மேலும் பணிபுரிய தூண்டுகிறது"2019ஆம் ஆண்டுக்கான சிறந்த இளைஞர் விருதை பெறுவதற்காக உலகம் முழுவதுமுள்ள 45க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.ஆப்பிரிக்கா-ஐரோப்பா, ஆசியா, கரீபியன்-கனடா, பசிபிக் என்று நான்கு பிரிவுக்கான பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலிருந்து நான்கு பேர் இறுதி செய்யப்பட்டு லண்டனில் இன்று நடந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்து பத்மநாபன், சாய் வெங்கட சத்திய கேதார் ஆகிய இருவரும், புரூனேவை சேர்ந்த சிடி நஜிஹா, பாகிஸ்தானை சேர்ந்த ஷன்ஸா கான் ஆகிய நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.விருது வென்ற தருணம் குறித்து பத்மநாபனிடம் கேட்டபோது, "உலகத்தின் ஒரு மூலையில் செய்து வரும் பணிக்கு கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம் எங்களது அணியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், மென்மேலும் திறம்பட பணிபுரியவும் தூண்டுகிறது. உணவு உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியா, பசி-பட்டினியால் வாடுபவர்கள் பட்டியலில் 103 வது இடத்திலுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம். அதாவது இந்தியாவில் இன்னமும் மில்லியன்கணக்கானோர் ஒருவேளை உணவுக்குக்கூட வழியின்றி உள்ளனர்" என்று கூறினார். "இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் வீணாக குப்பையில் போகிறது. நாட்டில் பசியால் வாடுபவர் ஒருவரும் இல்லை என்ற நிலையை அடையும்வரை எங்களது பணியை தொடர்வதற்கு இதுபோன்ற விருதுகள் மிகுந்த ஊக்கமளிக்கும்" என்று பத்மநாபன் கூறுகிறார்.மேலும், நேற்று நடைபெற்ற விழாவின்போது பத்மநாபனுக்கு விருதுக்கான சான்றிதழும், கோப்பையும் அளிக்கப்பட்டதுடன், 3,000 பவுண்டுகள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.முன்னதாக, நேற்று முன்தினம் நடைபெற்ற காமன்வெல்த் அமைப்பின் மற்றொரு விழாவின்போது, இங்கிலாந்து இளவரசர் சார்லசை சந்தித்து உரையாடியது தனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்று கூறுகிறார் பத்மநாபன். "இளைஞர்களை திரட்டி, நான் 'நோ ஃபுட் வேஸ்ட்டுக்காக' செய்துக்கொண்டிருக்கும் பணிகள் குறித்து இளவரசர் சார்லசிடம் விளக்கினேன். நான் சொன்னதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அவர் இறுதியில், 'நீங்கள் செய்யும் செயலில் தெளிவாக உள்ளீர்கள். இன்னும் சில ஆண்டுகளில் பல உயரங்களை தொடுவீர்கள்' என்று அவர் கூறியது மிகுந்த ஆச்சர்யத்தோடு, வாழ்க்கையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகமாக்கியது" என்று பத்மநாபன் கூறுகிறார்எதிர்கால திட்டம் என்ன?'நோ ஃபுட் வேஸ்ட்' தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வரும் வேளையில், கழிவு மேலாண்மை நிறுவனம் ஒன்றை தனியே நடத்தி வருகிறார் பத்மநாபன். "வாகனம் முதல் எரிபொருள் வரை எங்களுக்கு தேவையான அனைத்தையும், அந்தந்த நகரங்களை சேர்ந்த நிறுவனத்தினரும், அரசு அதிகாரிகளும், அரசும் உதவி வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் தன்னார்வலர்களாக எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.""நான் இந்த செயலை தொடங்கும்போது உடனிருந்த பலர், இது பொருளாதாரரீதியாக அவர்களது வாழ்க்கைக்கு உதவாததால் விலக நேரிட்டது என்னை பெரிதும் பாதித்தது. எனவே, சமுதாய நலனுக்காக உழைப்பவர்கள் அதன் மூலம் கிடைக்கும் திருப்தியைப் பெறுவது மட்டுமின்றி, வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக உயரவும் முடியும் என்பதை உணர்த்த விரும்புகிறேன். அடுத்த சில ஆண்டுகளில் என்னை போன்ற பல சமூக தொழில் முனைவோர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்" என்று விளக்குகிறார் பத்மநாபன்.அதுமட்டுமின்றி, 'நோ ஃபுட் வேஸ்ட்' அமைப்பின் சேவையை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக கூறும் பத்மநாபன், மேலை நாடுகளைப் போன்று இந்தியாவுக்கான 'உணவு வரைபடத்தை' உருவாக்குவதே தனது அடுத்த லட்சியம் என்று குறிப்பிடுகிறார்.
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?