தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

Ispade Rajavum Idhaya Raniyum Review: இது தான் உண்மை காதல்... இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்!

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

சென்னை: அளவுக்கு அதிகமாக நாம் நேசித்த ஒருவரை, எப்படி நம்மால் வெறுத்து துன்புறுத்த முடியும் என்ற கேள்வியை எழுப்பி, உண்மை காதல் என்றால் என்ன என்பதைப் பற்றி பேசுகிறது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படம். பொன்வண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தனக்கான வாழ்க்கையை தேடிக்கொள்கிறார் அவரது மனைவி லிஸ்ஸீ ஆண்டனி. இதனால் தாயின் அரவணைப்பில்லாமல் தந்தையுடன் வளரும் ஹரீஷ், தனது தாயை கடுமையாக வெறுக்கிறார். தாயின் மீதுள்ள வெறுப்பு, ஹரீஷின் சுபாவத்தையே மாற்றுகிறது. பொறுமையே இல்லாத, எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு சண்டைக்கு போகும் முரட்டு வாலிபனாக காணப்படுகிறார். யாரையும் மதிக்காத, யாருடனும் ஒட்டாத அந்த முரடனை தென்றலாய் வந்து வருடுகிறார் ஷில்பா.
பாசத்துக்காக ஏங்கி தவித்த ஹரீஷுக்கு, ஷில்பாவின் காதல் பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர் போல் இனிக்கிறது. ஆனாலும், ஹரீஷின் முரட்டுத்தனத்தால் ஷில்பா அவரை விட்டு பிரிகிறார்.தனக்கு கிடைத்த அன்பை விட்டுக் கொடுக்க முடியாமல், ஷில்பாவின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் ஹரீஷ் மேற்கொண்டு என்ன செய்கிறார்? காதல் ஜோடி இணைந்ததா? என்பது தான் மீதிப்படம். தமிழ் சினிமா அளவுக்கு வேறு எந்த மொழியிலும் இத்தனை ஆயிரம் காதல் படங்கள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு காதலை கொண்டாடி வருபவர்கள் நம் இயக்குனர்கள். ரஞ்சித் ஜெயக்கொடியின் இந்த இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படமும், அப்படி ஒரு காதல் கொண்டாட்டம் தான். ஆனால், இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும், காதல் என்றுமே சலிக்காது என்பதை ஆணித்தரமாக கூறுகிறது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும். 'முதலில் மோதல் பிறகு காதல்', 'பணக்கார பெண்ணுக்கும் ஏழை பையனுக்கும் காதல்', என ஏற்கனவே நாம் பலமுறை பார்த்து சலித்துபோன அதே ஒன்லைன் தான் இந்த படமும். ஆனால் ரஞ்சித் ஜெயக்கொடியின் திரைக்கதையும், தனித்துவமான கதாபாத்திரங்களும், ராஜன்ராதமனாலனுடன் இணைந்து அவர் எழுதிய வசனங்களும், சாமின் இசையும், கவினின் ஒளிப்பதிவும் என எல்லாம் சேர்ந்து படத்தை புதிதாக காட்டியிருக்கிறது. இன்றைய தலைமுறை இளைஞர்கள், தங்களை எளிதாக இப்படத்துக்குள் புகுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம். சமீபகாலமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், அதற்கு எதிரான படமாக, பெண்மை, காதலை போற்றும் படமாக வெளிவந்துள்ளது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும். சாதாரண கதைக்களத்தைக் கொண்டு வித்தியாசமான படத்தைக் கொடுத்துள்ள ரஞ்சித் ஜெயக்கொடிக்கு பாராட்டுகள். கவுதமும், தாராவும் வேறு யாரோ வேற்றுகிரகவாசிகள் அல்ல. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில் இவர்களும் ஒருவர் என்பதைத் தெளிவாகக் காட்டியதற்கு ஸ்பெஷல் கைதட்டல்கள். படத்தின் க்ளைமாக்ஸ் நெருங்கும் போது, "தாரா… ப்ளீஸ் கவுதமை விட்டு பிரிந்துவிடாதே" என பார்வையாளர்களிடமும் தவிப்பை உணர முடிகிறது. கடைசியில் என்ன ஆகுமோ என க்ளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை பதற வைத்திருக்கிறார் ரஞ்சித். பாசம், காதல், காமம், அன்பு, கோபம், வலி, குரோதம், வன்மம் என பல உணர்ச்சிகளை நமக்கு கடத்துகிறார் இயக்குனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-சின் பாடல்கள் நம்மை மெஸ்மரிசம் செய்து திரையில் மாயாஜால வித்தைகள் புரிகின்றன. சஞ்சாலி பாடலில் இருந்து தான் படமே தொடங்குகிறது. அங்கிருந்து நம்மை படத்திற்குள் கைப்பிடித்து இழுத்து செல்கிறது சாமின் இசை. சஞ்சாலி, ராசாத்தி, கண்ணம்மா என பெண்மையை கொண்டாடுகிறது பாடல்கள். ஏய் கடவுளே பாடல் இளவட்ட பசங்களின் காதல் ஆந்தமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் பாடல்கள் இன்னும் வெகு நாட்களுக்கு நம்ம காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தாயை வெறுக்கும் முரட்டு இளைஞனாக, வேறொரு பரிமாணத்தை காட்டுகிறார் ஹரீஷ். இந்த படத்துக்கு இவர் செட்டாவாரா என்ற கேள்விக்கே இடமில்லாமல், ஒவ்வொரு காட்சியிலும் சிக்சர் அடிக்கிறார். ஷில்பாவுடனான காதல் காட்சிகளில், ஒரு குழந்தையாக மாறி மனதை கொள்ளை கொள்கிறார். பாசத்துக்காக ஏங்கும் ஒருவனுக்கு புதிதாக ஒரு உறவு கிடைக்கும் போது, அந்த உறவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பில்லாத உணர்வுடன் அவன் எப்படி நடந்துகொள்வானோ, அதை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார் ஹரீஷ். இந்த இஸ்பேடு ராஜா, ஹரீஷை அடுத்தக்கட்டத்க்கு அழைத்து செல்கிறது. ஆண் தன்மை கலந்த பெண்ணாக, இளைஞர்களை கவரும் டாம் கேர்ளாக திரையில் ஜொலிக்கிறார் ஷில்பா மஞ்சுநாத். காளி படத்தில் பார்த்த கிராமத்து பெண்ணா இது என ஆச்சரியப்பட வைக்கிறார் இந்த இதய ராணி. தாராவை பார்க்கும் எந்த ஒரு இளைஞனும், அவளை தனது டிரீம் கேர்ளாக ஏற்றுக்கொள்வான். சாதாரணமாக வந்துபோகாமல், ஒவ்வொரு காட்சியிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார் ஷில்பா. இந்த படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு பெரிய ரவுண்ட் வருவார். பாலசரவணனும், மாகாபா ஆனந்த் ஹரீஷின் நண்பர்களாக, குணச்சிரித்திர நடிகர்களாகவே வருகின்றனர். அவ்வப்போது கொஞ்சமாக காமெடி செய்கிறார்கள். இவர்களது காமெடி பல இடங்களில் ஒர்கவுட்டாகததால், படம் ரொம்ப சீரியஸாக செல்வது போல் தோன்றுகிறது. பொறுப்புள்ள அப்பாவாக வரும் பொன்வண்ணன், தனது மகனிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அர்த்தம் பொதிந்தவை. வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பால் அந்த பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். சுரேஷ், லிஸ்ஸீ ஆண்டனி, திவ்யா, ஆதித்யா, மாத்யூஸ் என படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறார்கள். படம் மிகவும் ஃப்ரெஷ்ஷாக தெரிவதற்கு முக்கிய காரணம் கவின்ராஜின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசித்து ரசித்து வெச்சிருக்கிறார். அதுவும் சஞ்சாலி பாடலில் இமய மலையின் எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலை, கவின் படம் பிடித்திருக்கும் விதம் கண்ணுக்கு குளிர்ச்சி. வாழ்த்துக்கள் கவின். எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், தெளிவாக கதை சொல்லியிருக்கிறார் எடிட்டர் பவன் ஸ்ரீகுமார். ஆனால் க்ளைமாக்ஸுக்கு பிறகான காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நீளம். ஹரீஷை வைத்து மிக எதார்த்தமாக சண்டை காட்சிகளை அமைத்த, 'துப்பறிவாளன்' தினேஷ் காசியும் கவனம் ஈர்க்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியை தவிர்த்து, மற்ற அனைத்து காட்சிகளுமே நாம் ஏற்கனவே பார்த்த பல ஹிட் படங்களை நினைவுப்படுத்துகின்றன. முதல் பாதி படம் செம வேகமாக நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் தேவையில்லாத காட்சிகள் நிறைய இருக்கின்றன. அதுவும் இயக்குனரே நடித்திருக்கும் அந்த 'கஞ்சா' கிறுக்கனின் காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். அதேபோல், பாலசரவணனும், மாகாபா ஆனந்த்தும், சதா குடித்துக்கொண்டே இருப்பதும், மொக்கையாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பதும் உறுத்தலாகவே இருக்கிறது. இருப்பினும், இன்றைய இளைஞர்களை மையப்படுத்தி வரும் காதல் படங்களில் இருந்து தனித்து நிற்கிறான் இந்த இஸ்பேடு ராஜா. இவனை போல நம் ஊர் ரோமியோக்களும் யோசித்தால், நம் பெண்கள் அனைவருமே இதய ராணிகள் தான்.
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?