36வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராக மாறிய நடிகர் தனுஷ்…

36வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராக மாறிய நடிகர் தனுஷ்…

இன்று (ஜூலை 28) தனுஷ் தனது 36-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதை முன்னிட்டு தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தாணு, சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.முதலில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு பேசும் போது, “ஜூலை 28-ம் தேதி தனுஷுக்கு பிறந்த நாள். அன்றைய நாள் தமிழ் திரையுலகுக்கு மறக்க முடியாத நாள் என்று சொல்லலாம். என்னை ஈன்றெடுத்த தந்தையே, உங்களுக்கு எப்படியாபட்ட பிள்ளையாக நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து கொண்டிருக்கிறார். அதற்கு இங்கு கூடியிருக்கும் தனுஷ் ரசிகர்களே சாட்சி.

இந்தியாவிலிருக்கும் அனைத்து இயக்குநர்களும், நடிகர்களும் தனுஷுடன் பழக வேண்டும். அவரை வைத்துப் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். எந்தக் காலகட்டத்திலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடிய திறமையைக் கொண்டவர் தனுஷ். அவர் 100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்தாலும், சிறப்பாக நடித்துக்கொண்டே இருப்பார். அவரது வாழ்க்கையில் இன்னும் மிகப்பெரிய சிறப்புகளும், செல்வாக்குகளும், செல்வங்களும் வந்து சேரும். அவருடைய பிறந்த நாளில் நீங்கள் எல்லாம் ரத்த தானம் செய்கிறீர்கள். இது வேறு எந்த நடிகருக்கும் வாய்த்ததில்லை. அப்படியொரு சிறப்பு தனுஷுக்கு கிடைத்திருக்கிறது. தனுஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதோடு, இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராக பவனி வரப்போகிறார்” என்றார் தயாரிப்பாளர் தாணு. சாட்சாத் ரஜினிக்கும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்கியவரும் இதே தாணுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2002ம் ஆண்டு தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’மூலம் அறிமுகமான தனுஷ் துவக்கத்தில் ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா?’என்று விமர்சிக்கப்பட்டவர். ஆனால் அடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’படத்தில் அனைவரையும் அண்ணாந்து பார்க்கவைத்தார். வெற்றிமாறனின் ’ஆடுகளம்’படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். பாடலாசிரியர்,பாடகர், இயக்குநர்,தயாரிப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்து அசுர வளர்ச்சி கண்டிருக்கும் தனுஷ் ஒரு குட்டிக் கமலஹாசனாக மிளிர்கிறார் என்றால் மிகையில்லை.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *