நியூசி.யிடம் வீழ்ந்தது எப்படி? இந்திய அணியின் தோல்விக்கு அந்த 5 காரணங்கள்! Ind vs NZ: 5 reasons why India lost the match

உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேற்று முன் தினம் மோதின. மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி நேற்று தொடர்ந்து நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து 239 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 49.3 ஓவர்களில் 221 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு 5 காரணங்கள் முக்கியமாக அமைந்தன.

1. போட்டியின் தொடக்கத்தில் பந்து அருமையாக ஸ்விங் ஆனது. இதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால், இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, அதை கவனிக்காமல் ஒரு ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோலியும் அப்படியே. 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் இதே போல ரோகித் சர்மாவும், விராத் கோலி தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். அப்போதும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இவர்களை தொடர்ந்து கே.எல்.ராகுலும் ஒரு ரன்னில் வெளியேறினார்.

ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் முதல் முன்று ஆட்டக்காரர்கள் ஒரு ரன்னில் அவுட் ஆனது இதுவே முதல் முறை.

2. லீக் போட்டிகளில் ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது, எதிரணி விக்கெட் கீப்பர்களால் சில முறை அவரது கேட்ச் மிஸ்சாகி இருக்கிறது. மொத்தம் 4 முறை அவர் கேட்ச் கோட்டை விடப்பட்டிருக்கிறது. இதனால் அவர் சதங்களையும் அரை சதங்களையும் விளாசினார். ஆனால், நேற்றைய போட்டியில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லாதம் எந்த தவறையும் செய்யவில்லை. ரோகித் கேட்சை அருமையாக பிடித்தார். அவரும் ஜேம்ஸ் நீஷமும் இணைந்து கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் கொடுத்த கேட்ச்-களையும் சிறப்பாக பிடித்தனர். 

3. ரிஷாப் பன்ட்டும் ஹர்திக் பாண்ட்யாவும் நன்றாக செட் ஆன பிறகு, சன்ட்னர் பந்தை தூக்கி அடித்திருக்கக் கூடாது. இக்கட்டான நிலையில் அணி இருந்தபோது, பொறுப்பற்ற அந்த ஷாட்டை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும்.

4. ரவீந்திர ஜடேஜாவும் (77), தோனியும் 7 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 116 ரன்கள் சேர்த்தனர். பின்னர் கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அது அதிகப்படியான நெருக்கடியை அணிக்கு கொடுத்தது.

5. கடைசி கட்டத்தில் அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த தோனி, 48.3 வது ஓவரில் அவசரப்பட்டு 2 வது ரன்னுக்கு ஓடியிருக்கக் கூடாது. ஆக்ரோஷ குப்தில், சரியாக பந்தை எறிந்து சாய்த்தார் விக்கெட்டை! 

இதெல்லாம் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*