ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்ததுகுடிநீர்


ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் வெள்ளிக்கிழமை சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்டது. முதல் ரயிலில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் வந்துள்ளது. இந்த நீர், குழாய்கள் மூலமாக கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்படும் . பின்னர், சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தொடர்ந்து, பொதுமக்களின் தினசரி தேவையான 525 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு ரூ.233.72 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரிநீரைக் கொண்டு வரும் திட்டத்துக்காக ரூ.66 கோடி ஒதுக்கப்பட்டது.
n இதற்கான பணிகள் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்தனர். மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து சுண்ணாம்புக்காளை வழியாக பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரையில் மூன்றரை கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய்கள் இணைக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 10-ஆம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, உடைப்பைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இந்தப் பணிகள் முடிந்த பிறகு 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பார்ச்சம்பேட்டைக்கு குடிநீர் வந்தடைந்தது. பிறகு, ரயில் வேகன்களில் குடிநீர் நிரப்பும் பணி தொடங்கியது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணியளவில் அனைத்து வேகன்களிலும் குடிநீர் நிரப்பப்பட்டது. இதையடுத்து, 50 வேகன்களிலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு வர 5-ஆவது யார்டில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் வந்தவுடன் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு சென்னை வில்லிவாக்கத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த ரயில் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர். தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் நான்கு தவணைகளாக சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதற்காக தலா 50 வேகன்கள் கொண்ட இரண்டு ரயில்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கத்துக்கு நீரைக் கொண்டு வர ஒரு லிட்டருக்கு 34 பைசா என்று கணக்கிடப்பட்டு ஒரு நடைக்கு ரூ.8.6 லட்சத்தைக் கட்டணமாக தமிழக அரசு, ரயில்வேக்கு அளிக்கிறது. 30 நாள்களுக்குத் தண்ணீர் கொண்டு வர ரயில்வேக்கு ரூ.7.74 கோடியைக் கட்டணமாக தமிழக அரசு செலுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு மாதங்களுக்கு தினமும் 1 கோடி லிட்டர் ரயில் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்த உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜோலார்பேட்டையில் இருந்து முதல்கட்டமாக 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு, ஆறு மாத காலம் வரை தினமும் 1கோடி லிட்டர் குடிநீர் கொண்டுவரப்படும் என்றார்.

READ  தெரியாமல் கூட இந்த 6 ராசி பெண்களையும் லவ் பண்ணிடாதீங்க!