மண்ணுக்குள் மூழ்கும் வைகை அணை


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை, 1958 ல் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டது. உயரம் 71 அடி. 69 அடி வரை நீர் தேக்கலாம். கொள்ளளவு 6 ஆயிரத்து 868 மில்லியன் கன அடி. அணைக்கு வைகை, முல்லைப்பெரியாறு ஆகிய நதிகள் மூலம் தண்ணீர் வருகிறது. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பெரும்பகுதி குடிநீர், விவசாய தேவை இந்த அணையின் மூலமே பூர்த்தியாகிறது. தேனி மாவட்டத்தில் ஒரு பகுதி குடிநீர் வசதி பெறுகிறது வைகை, முல்லைப்பெரியாறு என இருவகை பாசனத் திட்டங்கள் உள்ளன. வைகை பாசனத்திட்டம் மூலம் 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கரும், பெரியாறு பாசனத் திட்டம் மூலம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 732 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.அரசின் அலட்சியம்வைகை நதியின் பிறப்பிடத்தில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கான நீர்வரத்து ஆண்டுதோறும் சரிகிறது.
n இயற்கையின் திருவிளையாடலால் ஒருபுறம் பின்னடைவை சந்தித்துள்ள வைகை அணை, மறுபுறம் அரசின் அலட்சியத்தால் படிப்படியாக மண்ணுக்குள் புதைந்து வருகிறது. அணை கட்டி அறுபது ஆண்டுகளை கடந்தும், இதுவரை துார்வாரப்படவில்லை.ஆற்றில் அடித்து வரப்படும் வண்டல் மண், மணல் மற்றும் கற்கள் கொஞ்சம், கொஞ்சமாக அணையை நிரப்புகின்றன. இவை 20 முதல் 22 அடி வரை தேங்கி இருப்பதாக கணக்கிடப்பட்டது. இதனால் மொத்த கொள்ளளவில் 777 மில்லியன் கனஅடியை வைகை அணை இழந்தது. இக்கணக்கெடுப்பு நடத்தி சில ஆண்டுகளாகிவிட்டன. தற்போதைய புள்ளிவிவரப்படி அணையின் மொத்த கொள்ளளவு 5 ஆயிரத்து 575 மில்லியன் கனஅடியாக சரிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஆறில் ஒருபங்கு தேக்கும் திறனை அணை இழந்து தவிக்கிறது. இந்நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் அணையில் நீர் தேக்க முடியாமல், மண் மேடுகளை மட்டுமே காண முடியும்.எனவே தான் அணையை துார்வார வேண்டும் என விவசாயிகள் போராடுகின்றனர். துாங்கும் திட்டம்அரசோ துார்வாரப்போவதாக கூறி 2009 ல் நிதி ஒதுக்கியது. ஆட்சி மாறியதும் இரு ஆண்டிலேயே அத்திட்டம் கைவிடப்பட்டது.பின் 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வைகை அணையை துார் வார முன்வந்த தனியார் நிறுவனம் திடீரென பின்வாங்கியது. இதற்கு அரசியல் நெருக்கடியே காரணம் என்று சொல்லப்பட்டது. அதாவது, 225 கோடி ரூபாயில் பெரும் பகுதியை கமிஷனாக தர வேண்டும் என அரசியல் புள்ளிகள் அட்டூழியம் செய்ததால் அந்நிறுவனம் பின்வாங்கியது. இப்படி அரசியல் சூழ்ச்சியால் துார்வாரும் திட்டம் 10 ஆண்டுகளாக படுத்து துாங்குகிறது. இச் சூழலில் புதிதாக துார்வாரும் திட்டம் ஒன்றை தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரைத்து உள்ளது. அரசுக்கு எவ்வித செலவும் இன்றி, வருவாய் ஏற்படும் வகையில் இத்திட்டத்தை பொதுப்பணித்துறை தயாரித்துள்ளது. இம்முறையாவது திட்டத்தை முறையாக செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். முதல்வர் அறிவிப்பாராமுதல்வர் பழனிசாமியின் கட்டுப்பாட்டில் பொதுப்பணித்துறை உள்ளது. சட்டசபையில் ஜூலை 15ல் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை நடக்கிறது. அத்துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார். முதன்மை திட்டமாக வைகை அணையை துார்வாரும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.அவ்வாறு அறிவிப்பதோடு பணிகளை உடனே துவங்கி, முதல்வரே மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.படிப்படியாக தன் கொள்ளளவை இழந்து மரண ஓலமிடும் வைகை அணையின் ஓயாத அபயக் குரல் முதல்வரின் காதுகளை எட்டுமா. காத்திருப்போம் ஜூலை 15 வரை!தற்போது பொதுப்பணித்துறை பரிந்துரைத்துள்ள திட்டம் ஒரே கல்லில் இருமாங்காய் அடிப்பது போன்றது. இதுவரை தீட்டப்பட்ட திட்டங்கள்படி நிறுவனங்களுக்கு அரசு நிதி வழங்கும். அவர்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய திட்டப்படி அரசுக்கு 200 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், 'அணையில் வண்டல், மணல் அதிகளவு தேங்கியுள்ளது. மணலை விற்றால் நல்ல வருவாய் கிடைக்கும். வண்டல் மண்ணையும் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவர். செங்கல் சூளைக்கான மண்ணும் தேங்கி உள்ளது. எனவே ஒப்பந்தம் பெறும் நிறுவனம், 200 கோடி ரூபாயை அரசுக்கு தர வேண்டும். பின் அணையை துார்வாரி, கிடைக்கும் மண் வகைகளை பிரித்து விற்பனை செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் வருமானம் நிறுவனத்துக்கானது. மண்ணை வெளியில் கொண்டு செல்ல ஏதுவாக அணைக்குள் பாதை வசதியை அரசே செய்து கொடுக்க வேண்டும். இதற்கு 9 லட்சம் வரை செலவாகும். இத்திட்டத்திற்கு நிச்சயம் முதல்வர் அனுமதி வழங்குவார்' என்றனர்.இதையும் கொஞ்சம் பரிசீலனை செய்யுங்க!அரசுத்துறையில் பணிபுரியும் வேளாண் விஞ்ஞானி ஒருவர் கூறியது:வைகை அணையை துார் வார்வதில் அரசின் தயக்கத்துக்கு காரணம் நிதி பற்றாக்குறை. செலவின்றி இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கலாம். வைகையால் பயன்பெறும் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் நன்கொடை பெற்றும், சேவை அமைப்புகளின் உதவியை பெற்றும் அணையை எளிதில் துார்வாரலாம். வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம். வீடுகள் கட்ட மணலை விற்பனை செய்யலாம். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.செம்மண், மணல் பாங்கான விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் வழங்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவ்வகை மண்ணுக்கு தண்ணீர் சேமிக்கும் தன்மை குறைவு. பயிர்களுக்கு அதிக நீரை செலவிட வேண்டும். ஆனால் வண்டல் மண் பரப்பினால், நல்ல சத்து கிடைப்பதோடு தண்ணீரை சேமிக்கும் திறனும் அதிகரிக்கும். வேளாண் உற்பத்தி பெருகும், என்றார்.வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, மாவட்டங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இதற்காக தினமும் வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 5.8 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படுகிறது. இதில் மதுரைக்கு 115 எம்.எல்.டி., கிடைக்கிறது. இதுபோக சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சி, தேனி அல்லிநகரம் நகராட்சி, வடுகப்பட்டி பேரூராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. மழை பொய்த்தால் ஆண்டு முழுவதும் குடிநீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த ஆண்டும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 28.77 அடி. கொள்ளளவு 322 மில்லியன் கனஅடி. தினமும் 6 மில்லியன் கனஅடி குடிநீருக்கு திறக்கப்படும் நிலையில், ஒரு மில்லியன் கனஅடி வரை ஆவியாகிறது. ஆக, இன்னும் 45 நாள் வரை குடிநீர் வழங்க முடியும். அதன் பிறகு வெறும் சேறு தான் அணையில் இருக்கும். ஒருவேளை அணையை துார்வாரி இருந்தால், இதே சமயத்தில் கூடுதலாக ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வரை தேங்கி இருக்கும். எனவே தான் அணையை துார்வார வேண்டியது அவசியமாகிறது.