மரண தண்டனை கைதிகளின் விபரம்… தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பு


கொழும்பு:மரண தண்டனைக் கைதிகளின் விபரங்கள் அடங்கிய கோப்பினை, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு நீதியமைச்சு அனுப்பியுள்ளது. ஆணைக்குழுவின் உத்தரவுக்கு இணங்க நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மரண தண்டனைக் கைதிகளின் விபரங்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், உடனடி ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்நாட்டுப் பிரஜைகளைக் கருத்திற்கொண்டு விரைவான பதிலை எதிர்பார்த்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினாலும், ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினாலும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவல் கோரல் விண்ணப்பத்தை அடுத்து, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட கைதிகளின் வழக்கு இலக்கம் மற்றும் அவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட திகதி என்பவற்றை வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டது.
n அதற்கமையவே குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்ட தகவலில் 18 மரண தண்டனைக் கைதிகளின் பெயர்களும், அவர்களது விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.