முன்னுதாரணம்!குருவாயூரப்பன் நகர் குட்டை தூர் வாரும் பணி துவங்கியது


திருப்பூர்:திருப்பூர் குருவாயூரப்பன் நகரில் உள்ள குட்டை துார் வாரும் பணியில், அனைவருக்கும் முன்னுதாரணமாக கட்டடப்பொறியாளர்கள் மாநகராட்சியுடன் கைகோர்த்துள்ளனர். இதேபோல், மற்ற குட்டைகள், நீர்நிலைகளை துார்வார பிற அமைப்புகள், தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.திருப்பூர் மாநகராட்சியில், பல்வேறு இடங்களில், குட்டைகள் இருந்தும், அவை சுவடுகளே தெரியாமல் மாயமாகியுள்ளன. தற்போதுள்ள குட்டைகளும் துார்வாரப்படாமல் இருக்கின்றன. நீர் வழித்தடங்கள் அடைபட்டுள்ளன.குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, சமீபகாலமாக, நீர்நிலைகளை காக்க வேண்டும் என்ற எண்ணம், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, அரசுத்துறையினரிடையே ஏற்பட்டிருக்கிறது. திருப்பூரில் உள்ள குட்டைகளை மீட்டெடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.குட்டைகளைத் தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் துார்வாரி, மழை நீரை சேகரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
n இதற்காக மண்டலம் வாரியாக குட்டைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குட்டையையும், ஒவ்வொரு தொண்டு நிறுவனம் மூலம் துார்வார திட்டமிடப்பட்டிருக்கிறது.இரண்டாம் மண்டலம், 18-வது வார்டு குருவாயூரப்பன் நகரில் உள்ள குட்டை திருப்பூர் கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில், துார்வாரும் பணி நேற்று தொடங்கியது. தலைவர் சிவன் பாலசுப்பிரமணியம், செயலாளர் ஸ்டாலின் பாரதி, துணைச் செயலாளர் அருண் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.'திருப்பூரில் நீர்நிலைகளைப் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சீரமைத்து வருகின்றன. இருப்பினும் குட்டை சீரமைப்பு என்பது தற்போதுதான் துவங்கி இருக்கிறது. குருவாயூரப்பன் நகர் குட்டையில், பொக்லைன் இயந்திரம் மூலம் குட்டையில் உள்ள முட்புதர், மண் உள்ளிட்டவற்றை அகற்றி மழைநீர் சேமிக்கும் அளவில் துார் வாரப்படும்.இதேபோல், பிற குட்டைகளிலும் தூர்வாரும் பணி துவங்கப்படும். தன்னார்வலர்கள், இதில் ஆர்வத்துடன் உள்ளனர்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *