தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்


தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்து, அதை உயர்த்திப் பிடிப்பவர்களாக தமிழர்கள் மாற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில், திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் 44-ஆவது ஆண்டு கபிலர் விழா வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா கபிலர் குன்று வழிபாட்டுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காலை 10.30 மணிக்கு "உவமைகள் உணர்த்தும் உண்மைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற சங்கப் பலகை நிகழ்வை, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் தொடக்கிவைத்தார். புதுதில்லி சாகித்ய அகாதெமியின் தமிழ் மொழி ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமை வகித்துப் பேசினார்.
n மாலை 5 மணிக்கு அறிஞர் உலா தொடங்கியது. கபிலர் விருது பெற்ற தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் ச.கணபதிராமன் வீரட்டானேசுவரர் கோயில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த நிகழ்வுக்கு அரிமா தா.சம்பத் தலைமை வகித்தார். சிங்கார உதியன், திருக்கோவிலூர் விவேகானந்தா வித்யாலயப் பள்ளி முதல்வர் வே.இந்திரா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை 6 மணிக்கு முன்னிரவு பரிசு நிலா நடைபெற்றது. இதில், சிறந்த நூலாசிரியர் கோ.உத்திராடத்துக்கு ரூ.10 ஆயிரமும், சென்னை நாம் தமிழர் பதிப்பக நிர்வாகி எஸ்.ராஜேந்திரனுக்கு ரூ.10 ஆயிரமும் மற்றும் சீ.ஹரிசிங்குக்கு "திருப்பணிச் செல்வர்' விருதும், மைசூர் கு.புகழேந்திக்கு "தமிழ்ச் செம்மல்' விருதும், வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விருது நிலா நிகழ்வுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்து, ச.கணபதிராமனுக்கு கபிலர் விருதும், பொற்கிழியும் வழங்கிப் பேசியதாவது: தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் கபிலர் விழாவில் விருது பெறும் பெருந்தகைகளுடன் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்லாயிரம் ஆண்டு கால பாரம் பரியமிக்க மொழிக்கும், கலாசாரத்துக்கும் சொந்தக்காரர்கள் தமிழர்கள். சிற்பம், கட்டடம், இலக்கியம், மருத்துவம் என எந்தத் துறையாக இருந்தாலும், அந்தத் துறையில் உன்னதத்தைத் தொட்டவர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தொல்காப்பியம், அகத்தியம் தோன்றி நிலைத்தது. பொது மறையாக திருக்குறள் திகழ்கிறது. 2-ஆவது, 3-ஆவது நூற்றாண்டுகளில் களப்பிரர்கள் வந்தபோது தமிழ் வீழாமல் இருந்தது. 3, 4-ஆவது நூற்றாண்டுகளில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழை பறைசாற்றியது. 5-ஆவது நூற்றாண்டில் திருமூலரும், காரைக்கால் அம்மையாரும், 6-ஆவது நூற்றாண்டில் ஞானசம்பந்தர், அப்பரும் 7-ஆவது நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனாரும், 8-ஆவது நூற்றாண்டில் ஆண்டாள், ஆழ்வார்களும் தோன்றி தமிழில் அற்புதம் செய்தனர். 9-ஆவது நூற்றாண்டில் யாப்பெரும்கலம் பிறந்தது. 10-ஆம் நூற்றாண்டில் பட்டினத்தார் பாடல்கள், 13-ஆம் நூற்றாண்டில் ஒப்பற்ற கம்பரின் காப்பியம், 12-ஆம் நூற்றாண்டில் சேக்கிழாரின் பெரிய புராணம் என வந்ததால் தமிழ் மொழியின் உன்னதம் உயர்ந்தது. கலாசாரம், பண்பாட்டை இந்த உலகுக்கு எடுத்துரைத்தது. தமிழ் மொழியை, அதன் மேன்மையை அறிந்தால்தான், இந்த மண் சார்ந்த விஷயத்தை, பண்பாட்டை உள்வாங்கினால்தான் தமிழை நமது அடையாளமாக எடுத்துச் சென்றால்தான் மொழியின் கடப்பாடை நிறைவேற்றியவர்களாக ஆவோம். தங்கள் மொழியை, மண்ணை, கலாசாரத்தை உயர்த்திப்பிடிக்கக் கூடிய இந்த உலகத்தில், யாதும் ஊரே, யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வந்தோரை வாழ வைக்கும் சிறப்பு தமிழ் மண்ணுக்கு உள்ளது. இந்த மொழிக்கானவர்களாக, அதை உயர்த்திப் பிடிப்பவர்களாக தமிழர்கள் மாற வேண்டும் என்றார் அவர். "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்: விருது பெற்றவர்களைப் பாராட்டி "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது: தன்னைப் பல்லக்கில் ஏற்றிப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற பாரதியின் ஆசையை கபிலர் விழா நிறைவேற்றி வருகிறது. ச.கணபதிராமன் போன்றோருக்கு விருது அளிப்பதால் இந்த விருதும், விழாவும் பெருமை கொள்கிறது. இதுபோன்ற இலக்கிய விழாக்களில் தமிழ் ஆர்வலர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றார் அவர். விழாவில், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் ச.கணபதிராமனுக்கு "கபிலர்' விருதும், "டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா' பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டன. ச.கணபதி ராமன் ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய கலாமந்திராலய குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பண்பாட்டுக் கழக துணைத் தலைவர் கா.பி.சுப்பிரமணியன் நன்றி கூறினார். பண்பாட்டுக் கழகச் செயலர் டி.எஸ்.தியாகராஜன், செயல் தலைவர் சீநி. பாலகிருஷ்ணன், பொதுச் செயலர் கி.மூர்த்தி, பொருளாளர் கா.நடராஜன், செயலர் கோ.தெய்வீகன், ஒருங்கிணைப்பாளர் கிருங்கை சேதுபதி, மணம்பூண்டி வே.அப்பர் சுந்தரம், நூலாசிரியர் கோ.உத்திராடம், பரிசு வழங்கிய அறக்கட்டளை நிர்வாகிகள் பரவளூர் பூமலை ஆசைத்தம்பி, கே.ராகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். திருக்கோவிலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபிலர் விழாவில் கபிலர் விருது, பொற்கிழியை தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் ச.கணபதிராமனுக்கு (இடமிருந்து 6-ஆவது) வழங்கினார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன். உடன் (இடமிருந்து) திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகப் பொருளாளர் கே.நடராஜன், அறக்கட்டளை நிறுவனர் பூமலை ஆசைத்தம்பி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருங்கை சேதுபதி, தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மைசூர் கு.புகழேந்தி, திருப்பணிச் செல்வர் விருது பெற்ற சீ.ஹரிசிங், பண்பாட்டுக் கழகச் செயலாளர் டி.எஸ்.தியாகராஜன், "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்,நிலக்கிழார் ராகவேல், நூலாசிரியர் கோ.உத்திராடம், நாம் தமிழர் பதிப்பக நிர்வாகி எஸ்.ராஜேந்திரன், பண்பாட்டுக் கழகத் துணைச் செயலர் தெய்வீகன் உள்ளிட்டோர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *