வேலூர் லோக்சபா தேர்தலில், ‘கிடுக்கிப்பிடி’: ஆந்திர சாராயம் தடுக்க 25 குழுக்கள்


வேலுார்:வேலுார் தொகுதி தேர்தலில், கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க, 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.வேலுார் லோக்சபா தேர்தல், ஆக., 5ல் நடக்கிறது. தேர்தலில், கட்சியினர், வாக்காளர்களை கவர, மது பாட்டில்கள் வழங்குவது வழக்கம். பத்தாயிரம் ரூபாய்க்கு மேல், மது பாட்டில்களை வாங்குவோர் பெயர் விபரம், மொபைல் போன் எண்களை சேகரிக்க, 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதனால், ஆந்திர மாநிலம், குடிபாலா போன்ற இடங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சி, அதை மலிவு விலையில் விற்கின்றனர். இதை, தேர்தலில் போட்டியிடும் கட்சியினர், இப்போது முதலே வாங்கி, இருப்பு வைத்துக் கொள்கின்றனர்.இதை தடுக்க, தமிழக -ஆந்திர மாநில எல்லை பகுதியில், தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட, எஸ்.பி., பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
n தமிழக – ஆந்திர மாநில போலீசார் இணைந்து, 25 குழுக்களை அமைத்து உள்ளனர்.இக்குழுக்கள், தமிழக – ஆந்திரா மாநில எல்லையான, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, குடியாத்தம் அடுத்த பரதராமி உள்பட, 10 இடங்களில், 24 மணி நேரமும் ரோந்து சென்று வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சி, கடத்தி வருவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்கவும் திட்டமிட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.தி.மு.க.,வினர் மீது புகார்வேலுார் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை, 19ம் தேதி நடந்தது. அப்போது, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக வேட்பாளர் கார்டு பிரே நோபல் என்பவர், 'கடந்த முறை, வேலுார் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான, கதிர்ஆனந்த் மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, ஆட்சேபனை தெரிவித்தார். இது குறித்து, நிருபர்களிடம் அவர் பேட்டி தரும்போது, தி.மு.க., வினரால் தாக்கப்பட்டார்.இதையடுத்து அவர், நேற்று, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.அதில், 'உன்னை கொன்று விடுவோம், எப்படி தேர்தல் பிரசாரம் செய்கிறாய் என்பதை பார்ப்போம் என, தி.மு.க.,வினர், எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.இன்று இறுதி பட்டியல்வேலுாரில், 50 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில், 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 31 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனு வாபஸ் பெற, இன்று கடைசி நாள். இன்று மாலை, 4:00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.மாற்றக் கூடாதுவேலுாரில், பல்வேறு கட்சிகள் சார்பில் கார், வேன், ஆட்டோக்களில் சென்று பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். 'இதற்கு, அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.வேலுார் தொகுதியில் இதுவரை, 135 பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் பிரசாரம் செய்த, 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:தேர்தல் பிரசார வாகனங்கள், தடையில்லா சான்று பெற வரும்போது, வாகனத்தின் அனுமதி சீட்டு, எண், டிரைவர் பெயர், அவரது ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை இணைக்க வேண்டும். ஆனால், தடையில்லா சான்று பெற்ற பிறகு, பிரசார வாகனங்களில் தங்கள் இஷ்டம் போல, நிறைய பேனர்களை வைக்கின்றனர்.சிலர், வாகனத்தையே மாற்றி கொள்கின்றனர். எனவே, தடையில்லா சான்று பெற்ற பிறகு, பிரசார வாகனங்களில், எந்த மாற்றமும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ரங்கோலி மூலம் விழிப்புணர்வுவேலுார் லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு, தேர்தல் அதிகாரிகள், பல்வேறு விதமாக விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வேலுார் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில், கே.வி.குப்பம் பஸ் ஸ்டாண்டில், ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.வேலுாரில், விரல் மை வடிவில் நின்று, தேர்தல் விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பைக் பேரணியும் நடத்தப்பட்டது.