அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர், கடந்த 48 நாட்களாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். 24 நாட்கள் சயன நிலையிலும் 24 நாட்கள் நின்ற நிலையிலும் பக்தர்களுக்கு தரிசனம் தந்த அத்தி வரதர் நேற்று மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட்டார் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. 48 நாட்கள் பக்தர்களின் தரிசனம் முடிந்து விட்டதை அடுத்து நேற்று அதிகாலை அத்தி வரதருக்கு பரிகார பூஜை நடைபெற்றது.
அடுத்த 40 ஆண்டுகளில் அத்தி வரதர் சிலைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக மூலிகைகள் உள்பட திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் அத்தி வரதர் சிலை அனந்தசரஸ் குலத்திற்கு வைக்கப்பட்டது. மீண்டும் அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதர் சிலையை 2059 ஆண்டுதான் வெளியே எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது அத்திவரதர் சிலையின் தலைக்கு அருகே தலைமாட்டில் கருங்கற்களால் செய்யப்பட்ட 5 தலை நாகங்கள் உள்பட மொத்தம் 16 நாகங்கள் உள்ளன. இந்த நாகங்கள் தான் அடுத்த 40 ஆண்டுகளுக்கு அத்திவரதரை காவல் காக்கின்றன என்பது ஐதீகம்


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *