திருட்டு கதைகளில் மட்டுமே நடிக்கிறாரா விஜய்?

பிகில் பட கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் திருடப்பட கதைகளை விஜய் அதிகமாக தேர்வு செய்வதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

விஜய் படங்கள் வெளியாவதற்கு முன்பே, அந்த படத்தின் கதை திருடப்பட்டது என கூறி எழும் சர்ச்சைகள் வாடிக்கையாகிவிட்டது. கத்தி படத்தில் தொடங்கிய கதைத் திருட்டு சர்ச்சை, பிகில் வரைநீண்டு கொண்டே இருக்கிறது. கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் அவரின் 63வது படமான பிகில் படத்தின் கதை, தன்னுடைய கதை என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் கடந்த சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் இந்த அறிக்கைக்கு நேர்மாறாக கே.பி.செல்வா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கதை திருட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளார்.

5 மாதம் சிட்டி சிவில் கோர்ட்டில் நடைப்பெற்ற வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததாலும், ஐகோர்ட்டில் மட்டுமே காப்பிரைட் வழக்குகள் நடத்த முடியும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டதாலும்தான் வழக்கை திரும்பபெற்றதாகக் கூறியிருக்கிறார் செல்வா. அதே சமயம் வழக்கில் வாதாடி வென்றது போல ஏஜிஎஸ் தரப்பு அறிக்கை வெளியிட்டிருப்பது விளம்பரம் தேடும் செயல் என வேதனை தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி மற்றும் சர்க்கார் பட கதைகளும் திருடப்பட்டவை என வழக்குகள் போடப்பட்டன. இதில் கத்தி படத்திற்கு எதிராக போடப்பட்ட வழக்கை கோபி நய்னார் பல சர்ச்சைகளுக்குப் பிறகு வாபஸ் பெற்றார். சர்க்கார் படத்தில் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் வருண் ராஜேந்திரன் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த அச்சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் வருண் ராஜேந்திரனுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரினார்.

இறுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி வருண் ராஜேந்திரனின் பெயரை படம் தொடங்குவதற்கு முன்னராக செங்கோல் கதையின் தழுவல் என அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதே போல அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, சத்ரியன் படத்தின் தழுவல் என்றும், மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் தழுவல் என்றும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த வரிசையில் தற்போது பிகில் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. விஜய் தேர்ந்தெடுக்கும் கதைகள் திருடப்பட்ட கதைகளா அல்ல திருடப்பட்ட கதைகளை மட்டும்தான் தேர்வு செய்கிறாரா என்ற விரக்தியில் உள்ளனர் அவரின் ரசிகர்கள்.

உங்கள் கருத்தினை கீழே உள்ள இணைப்பில் சென்று வாக்களிக்கவும்
VOTE HERE