”சினிமா வாய்ப்பு இல்லாததால் ரஜினி அரசியலுக்கு வர முயற்சி”- வேல்முருகன் பொளேர்!

சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் போதும் என்றும், இனியும் மக்கள் அதனை அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்காக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி பின்வருமாறு; கேள்வி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறதே..என்ன காரணம்?பதில்: நீங்கள் கூறுவதை முற்றிலுமாக மறுக்கிறேன். தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை, தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுப்பவன் நான். தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் எம்.எல்.ஏ.வோ, எம்.பி.யோ இல்லாததால் எங்கள் செய்திகளுக்கு ஊடகங்கள், பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் தொய்வு ஏற்பட்டிருப்பது போன்ற மாயை உருவாகியுள்ளது. கேள்வி: வடதமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் அளிப்பது ஏன்? பதில்: யார் சொன்னது வடதமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று, அது பார்ப்பவர்களின் பார்வையில் உள்ள தவறு. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலத்தடி நீரை உறிஞ்சும் கோக் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம், ராமேஸ்வரத்தில் மாவீரன் நாள் நிகழ்வு என, பல நிகழ்ச்சிகளை தென் தமிழகத்தில் நடத்தியுள்ளேன். மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு தர வலியுறுத்தி மதுரையில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினேன். தூத்துக்குடியில் அண்மையில் கூட அரசு பொதுமருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினோம். என்னை பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு ஜாதிக்காகவோ, இனத்துக்காகவோ நான் அரசியலை முன்னெடுக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களின் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். பத்திரிகைகள் தான் எங்களை ஒரு வட்டத்திற்குள் சுருக்கப் பார்க்கின்றன. கேள்வி: உங்களுக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது..இப்போது உடல்நிலை எப்படி உள்ளது? பதில்: அதிகமாக பயணம் செய்வதால் முதுகுவலி உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் கி.மீ தூரம் வரை பயணிக்கிறேன். இப்படி பயணத்தில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்டதால் வயிற்றில் ஒவ்வாமை ஏற்பட்டு அல்சர் ஏற்பட்டது. நான் சிறையில் இருந்தபோது அது மேலும் வீரியமானது. அதற்கு மருந்துகள் எடுத்து வருகிறேன். இதைத்தவிர எனக்கு வேறு எந்த பிரச்சனையுமில்லை, நன்றாக இருக்கிறேன்.கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் உங்கள் திட்டம் என்ன? பதில்: எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட அரசுப்பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தியலுக்கு முன்னுரிமை அளிப்பது எனது நோக்கமல்ல. என்னை பொறுத்தவரை கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அதனால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேடி அழைத்து தந்த வாய்ப்பை உதறித் தள்ளினேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடக் கூறியதால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு பதவிவெறி கிடையாது. மத்தியில் பாஜக அரசின் காட்டாட்சி வரக்கூடாது என்பதற்காக மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். கேள்வி: சினிமாத்துறையினர் மீது அதுவும் குறிப்பாக நடிகர்கள் மீது உங்களுக்கு கோபம் வருகிறேதே..ஏன்? பதில்: ஒட்டுமொத்த சினிமாக்காரர்களை நான் குறைகூறவில்லை, எதிர்க்கவில்லை. ஒரு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் தனி மனித ஒழுக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான காட்சிகளை திரைப்படங்கள் வழியே புகுத்தி தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரங்களை சீரழிக்கின்றனர். பீடி, சிகரெட் புகைப்பது போலவும், மது அருந்துவது போலவும் காட்சிகளில் நடித்து தங்களின் புகழ் வெளிச்சத்திற்காக இளைஞர்களை அழிக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை தான் நான் எதிர்த்து வருகிறேன். சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் போதும், இனி மக்கள் அனுமதிக்கக்கூடாது. நடிகர்களை முதல்வராக்க வேண்டும் என்ற அறியாமையில் வீழ்ந்துகிடக்கும் தமிழ்ச் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒரு சில கருத்துக்களை தெரிவிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். கேள்வி: ரஜினிகாந்த் கட்சி தொடங்கி, ஒரு வேளை வேல்முருகனை அழைத்தால் என்ன செய்வீர்கள்? பதில்: சினிமா வாய்ப்பு குறைந்துவிட்டதால் ரஜினி அரசியலுக்கு வர பார்ப்பதோடு, இரட்டை சவாரி செய்யவும் முயற்சிக்கிறார். கட்சி தொடங்கட்டும் வேண்டாம் எனச் சொல்லவில்லை. தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடி, மக்களின் இன்ப துண்பங்களில் பங்கெடுத்த ஒரு ரசிகனை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிப்பாரா..அப்படி சொல்லட்டும் பார்க்கலாம்.கேள்வி: நீங்கள் கூறுவதை கவனித்தால், தமிழகம் தமிழர்களுக்கு மட்டும் என்பதை போல் உள்ளதே?பதில்: ஆம், இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களுக்கே அதிகளவு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எந்த ரயில் நிலையத்திலும் தமிழனுக்கு வேலை இல்லை. உயர் அதிகாரிகள் தொடங்கி சிக்னல் கார்டு, கேட் கீப்பர் வரை வெளிமாநிலத்தை சேர்ந்தவன் தான் பணியில் உள்ளான். இதில் பெரிய அரசியல் நடக்கிறது. பாஜகவை தமிழகத்தில் மக்கள் காலூன்ற விடமாட்டார்கள் என்பதை அறிந்து ஒரு கோடி வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இது அடுத்த வருடம் இரண்டு கோடியாகும். இப்படியே விட்டால் தமிழர்களின் ஆட்சி அதிகாரம் பறிபோய்விடும். அதனால் தான் மண்ணின் மைந்தர்களுக்கு பணி வழங்கக் கோருகிறேன். கேள்வி: முதல்வரின் வெளிநாடு பயணம் பற்றிய உங்கள் கருத்து?பதில்: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு சென்றது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், அளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும். அதை ஏன் வெள்ளை அறிக்கையாக வெளியிட முதல்வர் தயங்குகிறார் எனத் தெரியவில்லை. அடுத்தமுறை ஆட்சிக்கு வரமுடியாது என உணர்ந்து, அமைச்சர்கள் வெளிநாடு டூர் அடித்துள்ளனர். ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வெளிநாடு சென்றது எனக்கென்னவோ நல்லதாக தெரியவில்லை.